இலங்கையின் நிலைமைகளை உன்னிப்பாக அவதானிக்கும் நாணய நிதியம்
இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி மசாஹிரோ நொசாகி வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் பல தசாப்தங்களில் ஏற்படாத வகையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் பொது அமைதியின்மை அதிகரித்து வருகிறது.
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது. புதிதாக நியமிக்கப்படும் நிதியமைச்சர் உட்பட அதிகாரிகள் இந்த மாதம் வொஷிங்டன் விஜயம் செய்யும் போது நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து கலந்துரையாட நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்பார்த்துள்ளனர் என மசாஹிரோ நொசாகி கூறியுள்ளார்.
அமைச்சரவை ராஜினாமா செய்ததை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புதிய நிதியமைச்சரயை நேற்று நியமித்ததுடன் இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநரையும் நியமிக்க எதிர்பார்த்திருந்தார்.
எவ்வாறாயினும் புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட அலி சப்றி இன்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை மிகவும் கேள்விக்குள்ளாகி உள்ளது.