யாழில் சட்டவிரோதமாக கடலாமைகளைக் கொண்டுச் சென்ற இருவர் கைது!
யாழில் சட்டவிரோதமான முறையில் இன்று (31.07.2023) காலை வேளையில் நான்கு கடலாமைகளை பட்டாரக வாகனத்தில் கொண்டு சென்ற இருவர் யாழ். மானிப்பாய் பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்துள்ளனர் .
மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் பகுதியில் வீதிப்போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த மானிப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மில்றோய் உட்பட்ட போக்குவரத்து பிரிவு பொலிஸார் பட்டாரக வாகனமொன்றை வழிமறித்து சோதனையிட்டபோதே வாகனத்தின் பின்புறத்தில் சாக்கினுள் கட்டப்பட்டிருந்த நிலையில் 4 கடலாமைகள் உயிருடன் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் விசாரித்தபோது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் 47 மற்றும் 32 வயதான கொழும்புத்துறை மற்றும் இளவாலை பகுதியை சேர்ந்த இருவர் கடலாமைகளை விற்பனைக்கு எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அவர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.