சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட முதலை குட்டி ; நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
அளுத்கம, களுவாமோதர பகுதியில் சட்டவிரோதமான முறையில் முதலைக்குட்டியொன்றை வைத்திருந்த 44 வயதுடைய நபர் ஒருவர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுவாமோதர பகுதியில் முதலைக்குட்டியொன்றை வளர்த்து வருவதாக ஹிக்கடுவ தேசிய பூங்கா தலைமையகத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, அவருக்கு 70,000 ரூபா அபராதம் விதித்து நீதவான் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முதலைக்குட்டியை தகுந்த சூழலில் விடுவிக்குமாறு வனஜீவராசிகள் கால்நடை மருத்துவருக்கு நீதவான் பணிப்புரை விடுத்ததுடன், குறித்த சம்பவம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையின் விலங்கின மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் முதலைகள் கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டிய ஊர்வன பிரிவில் அடங்குவதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குக் காண்பித்து பணம் சம்பாதிக்கும் நோக்கில் பலர் சட்டவிரோதமாக முதலைக்குட்டிகளை வளர்த்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்ய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தொடர்ச்சியான சோதனைகளை முன்னெடுத்து வருவதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.