சட்டவிரோத பிரமிட் நிறுவன மோசடி: சந்தேகநபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
சட்டவிரோத பிரமிட் நிறுவனத்தின் பணிப்பாளராக செயற்பட்டு மக்களின் பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் வியாழக்கிழமை (03) உத்தரவிட்டார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் போது சந்தேக நபரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், சந்தேக நபருக்கு மேலும் 2 வங்கிக் கணக்குகள் உள்ளமை தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

வாக்குமூலங்கள்
அத்துடன், இந்த பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக 17 பிரதேசங்களில் இருந்து தலா ஒரு முகாமையாளர் வீதம் 17 முகாமையாளர்களிடம் இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 5 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
அதேபோல், சந்தேக நபரின் தந்தை, மனைவி உட்பட இச்சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சாட்சிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பெறப்பட்டு முடிவடைந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
சந்தேக நபரின் மனைவி வசிக்கும் வீட்டை பரிசோதித்த போது, வழக்குடன் தொடர்புடைய முக்கிய சான்றுகளும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மன்றில் விடயங்களை முன்iவைத்தனர்.
சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி விடயங்களை முன்வைக்கையில், சந்தேக நபர் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும், இதற்கு முன்னர் இலங்கை மத்திய வங்கி மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
சந்தேக நபரின் மனைவி, தந்தை உட்பட அனைவரிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் சாட்சிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்த முடியாது.
மனைவியின் வீட்டில் இருந்து உரிய சான்றுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதால், எந்தவொரு பிணை நிபந்தனையின் கீழும் அவரை விடுவிக்குமாறு கோரினார்.
இருதரப்பு சமர்ப்பணங்களையும் பரிசீலித்த தலைமை நீதிவான், சந்தேக நபர் மேற்கொண்ட பிரமிட் மோசடி, தங்கம் வாங்கப்பட்ட மற்றும் விற்கப்பட்ட இடங்கள், அதற்காக பணம் ஈட்டப்பட்ட விதம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அத்துடன் சந்தேக நபரை 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.