சட்டவிரோத மின்வேலியால் காட்டு யானையை கொன்றவர்கள் கைது
சட்டவிரோதமாக மின்வேலியினை அமைத்து காட்டு யானை ஒன்றை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரை வனஜீவராசிகள் திணைக்கள அநுராதபுரம் தந்திரிமலை வட்டார அலுவலக அதிகாரிகள் நேற்று (17.09.2025) கைதுசெய்துள்ளனர்.
அநுராதபுரம் மகாவிலச்சிய மெததன்கஸ்வெவ பகுதியிலுள்ள விவசாய நிலமொன்றில் சட்டவிரோதமாக மின்வேலியினை அமைத்து காட்டு யானை ஒன்றினை கொன்ற சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள தந்திரிமலை வட்டார அலுவலக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேக நபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த யானை
மின் வேலியில் சிக்கி உயிரிழந்த யானையின் சடலத்தினை கண்டுபிடித்துள்ளதுடன் விவசாய நில உரிமையாளர் உட்பட சந்தேக நபர்கள் மூவரை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் அநுராதபுரம் மகாவிலச்சிய ,இஹலஹேனமுள்ள,மெததன்கஸ்வெவ பகுதியை வசிப்பிடமாக கொண்ட 42,46,58 வயதுடையவர்கள் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம்,தந்திரி மலை வனஜீவராசிகள் வட்டார அலுவலக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.