இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம்! எடுக்கவுள்ள முடிவுகள்
கொழும்பில் உள்ள இரா.சம்பந்தனின் R. Sampanthan சொகுசு பங்களாவில் இன்று காலை 10 மணிக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கட்சியின் அரசியல் குழு கூட்டங்களிலும், மத்திய குழுக்கூட்டங்களிலும் இரா.சம்பந்தன் கலந்துகொள்ளவில்லை. கட்சி விவகாரங்களிலும் அவ்வளவாக தலைபோட்டதில்லை.
இருப்பினும், கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலின் பின்னர் நிலைமை மாறி விட்டது. கட்சிக்குள் எம்.ஏ.சுமந்திரன் M A Sumanthiran தலைமையில் உருவாகும் குழு, தனக்கும் எதிராக திரும்பியுள்ளதாக இரா.சம்பந்தன் உணர்ந்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உடைந்ததற்கும் இந்த குழு பின்னணியில் இருந்ததாக இரா.சம்பந்தன் சந்தேகிக்கிறார்.
மேலும், கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் வேட்பாளர் தெரிவில் திருகோணமலையில் இரா.சம்பந்தனினால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களை, கனடா குகதாசன் நிராகரித்திருந்தார்.
இந்த பின்னணியில் தமிழ் அரசு கட்சியை கட்டுக்குள் கொண்டு வரும் நகர்வுகளை இரா.சம்பந்தன் தீவிரமாக ஆரம்பித்துள்ளார்.
கட்சியின் அடுத்த தலைவராக எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் அல்லாத மற்றொருவரை நியமிப்பதென்றும், செயலாளராக மாவை சேனாதிராசாவை நியமிப்பதென்றும் இரா.சம்பந்தன் தீர்மானித்து காய்நகர்த்தி வருகிறார்.
இந்தநிலையில், தனது கொழும்பு பங்களாவில் அரசியல் குழுக்கூட்டத்தை நடத்துமாறு தமிழரசு கட்சி தலைவருக்கு பணித்துள்ளார்.
இதனை ஏற்ற மாவை சேனாதிராசா அரசியல் குழு கூட்டத்தை நாளை (06-06-2023) ஒழுங்கு செய்துள்ளார்.
குறித்த கூட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா சம்மந்தன் சில கண்டிப்பான முடிவுகளை கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் குழு உறுப்பினர்களாக இரா.சம்மந்தன், மாவை சேனாதிராசா, பொ.செல்வராசா, கி.துரைராசசிங்கம், சீ.வீ.கே சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், த.கலையரசன், சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், இ.சாணக்கியன், குலநாயகம், குகதாசன்,சட்டத்தரணி தவராசா ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.