பொலிஸ் மரியாதைகளுடன் விக்கிரமரத்னவின் இறுதிச் சடங்கு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் 20ஆம் திகதி பொலிஸ் மரியாதைகளுடன் நடைபெறவுள்ளன.
ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் ஒருவர் காலமானால் வழங்கப்படும் அனைத்து பொலிஸ் உயரிய மரியாதைகளும் அவருக்கும் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அவரது உடல் கொழும்பிலுள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை (19) முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையின் 35ஆவது பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய சி.டி. விக்கிரமரத்ன, (17) ஆம் திகதிஅவரது இல்லத்தில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனையின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரி திறந்த தீர்ப்பை வழங்கியுள்ளதுடன், உடலப் பாகங்கள் மற்றும் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கி ஆகியவை மேலதிக பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பப்பட்டுள்ளன.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரும் மாலபே பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக, அவரது மனைவி மற்றும் மூன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.