இந்த நேரத்தில் பொங்கல் வைத்தால் செல்வமும் சந்தோஷமும் பொங்கி வழியும்!
பண்டிகை நாட்கள் என்றாலே நம்முடைய மனது முழுவதும் சந்தோஷம் நிறைவாக இருக்கும். அதிலும் இந்த தைத்திருநாள் வந்து விட்டால், நான்கு நாட்கள் சொந்த பந்தங்கள் சேர்ந்து, அவ்வளவு பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.
நகர்ப்புறங்களை ஒப்பிடும்போது, கிராமப்புறங்களில் இந்த தைப்பொங்கல், திருவிழா போல கொண்டாடப்படும். இந்த வருடம் தைப்பொங்கல் 15.1.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று வரவிருக்கின்றது.
சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தான் இந்த தைத்திருநாளை நாம் கொண்டாடுகின்றோம். சூரியன் இல்லை என்றால் இந்த பூலோகத்தில் ஒரு சின்ன உயிர் கூட வாழ முடியாது.
நமக்கு எல்லாம் வெளிச்சத்தை கொடுத்து, வாழ்வாதாரத்தை கொடுக்கக்கூடிய அந்த சூரிய பகவானுக்கு உகந்த நாளான ஞாயிற்றுக்கிழமை அன்றே இந்த வருட தைப்பொங்கல் வந்திருப்பதால் இது சிறப்பு வாய்ந்த பொங்கலாக கருதப்படுகிறது.
இந்த வருட தைத்திருநாள் அன்று வீட்டில் எந்த நேரத்தில் பொங்கல் வைத்தால் நல்லது, மிக மிக எளிமையான முறையில் இந்த தைத்திருநாளை எப்படி வழிபாடு செய்து கொண்டாடுவது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
தைப்பொங்கல் வைக்க வேண்டிய நேரம் பொங்கல் என்றாலே அது சூரிய பகவானுக்காக கொண்டாடப்படக்கூடிய பண்டிகை. ஆகையால் சூரிய பகவான் உதயமாகும் போது, சூரிய பகவானுக்கு பொங்கல் படைத்து குடும்பத்தோடு பொங்கலோ பொங்கல், என்ற வார்த்தைகளை சொல்லி வழிபாடு செய்வது மிக மிக சிறப்பு.
அதாவது நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேலை 5.00 மணிக்கு பொங்கல் வைக்க தொடங்கி விட வேண்டும். அப்படி என்றால் வீட்டில் இருக்கும் பெண்கள் 4.00 மணிக்கே எழுந்து குளித்து இருக்க வேண்டும்.
உங்களுக்கு வசதி இருந்தால் மொட்டை மாடியில் அல்லது வீட்டுக்கு வெளி புறத்திலோ சாணம் மெழுகி அதன் மேலே பச்சரிசி மாவால் கோலம் போட்டு, செங்கற்களை அடுக்கி விறகு மூட்டி மண்பானை அல்லது பித்தளை பானை அல்லது வெங்களப்பானை இப்படி உங்கள் வீட்டில் எது இருக்கிறதோ அந்த பானையை வைத்து அதில் பொங்கல் வைக்க வேண்டும்.
அதிகாலையில் பொங்கல் வைக்க முடியாதவர்கள் காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் வைக்கலாம். அந்த நேரத்தையும் தவற விட்டவர்கள் 10.30 முதல் 11.30 மணிக்குள் வைக்கலாம். ஒரு வேளை உங்களால் காலையில் பொங்கல் வைக்க இயலவில்லை என்றால் மாலை 3.30 முதல் 4.30 மணிக்குள் பொங்கல் வைக்கலாம்.
பொங்கல் வெந்து தயாராகுவதற்கு ஒரு மணி நேரம் எடுக்கும். காலை 6.00 மணிக்கு சூரியன் உதயமாகும் போது தயாரான பொங்கலை சூரிய பகவானுக்கு படைத்து, சூரிய பகவானுக்கு நன்றிகள் தெரிவித்து, வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளும் விவசாயமும் இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரையும் நல்லபடியாக வாழ வைக்க வேண்டும் என்று சூரிய பகவானிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
பொங்கல் வைக்கக்கூடிய இந்த இடத்தில் வழக்கம் போல மஞ்சள் கொத்து, காய்கறிகள், கரும்பு, இவைகளை எல்லாம் படைத்து கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அந்த பொங்கலை சாப்பிடுவது வழக்கம். வெளியிடங்களில் எல்லோராலும் நெருப்பு மூட்டி பானையில் பொங்கல் வைக்க முடியாது.
வீட்டிற்கு உள்ளேயே கேஸ் ஸ்டவ்வில் பொங்கல் வைப்பதாக இருந்தாலும் சரி, குக்கரில் பொங்கல் வைக்காதீங்க. உங்கள் வீட்டில் இருக்கும் பாத்திரத்தில் பொங்கல் வைத்து பொங்கல் தயாரானதும் அதை வாழை இலையில் வைத்து நிவேதியமாக, சூரியன் உதயமாகும் போது சூரியனுக்கு அந்த பொங்கலை படைத்து பூஜை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.