பதவி பெறுவதற்கு நான் தயாராக இல்லை; ரணில் விடுத்த கோரிக்கை!
பதவிகளை ஏற்றுக் கொள்வதற்கு தான் தயாராக இல்லை என்று அறிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகிய நிலையில் , தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அமைச்சு பதவிகளை ஏற்று ஒன்றிணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையிலேயே இதற்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கையொன்றினை வெளியிட்டு ஐக்கிய தேசிய கட்சி இதனைக் குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இதுவரையில் ஏற்றுக் கொள்ளாத எந்தவொரு பதவியையும் , தற்போதும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்று அறிவித்துள்ளார் என்பதை ஐ.தே.க. தெரிவித்துக் கொள்கிறது.
சர்வகட்சி மாநாட்டிலும் முன்வைக்கப்பட்ட யோசனைக்கமைய அனைத்து கட்சிகளினதும் தலைவர்களின் பங்குபற்றலுடன் குழுவொன்றை நியமித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்போது அதே நிலைப்பாட்டையே கொண்டுள்ளார்.
அதில் எவ்வித மாற்றங்களும் இல்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இதனை கட்சி பேதமின்றி தேசிய இணக்கப்பாட்டுடன் செயற்படுத்த வேண்டியுள்ளதாகவும் , நாடாளுமன்றம் கூடியவுடன் இதனை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.