சீனி வரி மோசடி தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை!
அரசுக்கு 16 பில்லியன் ரூபாவுக்கு அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்திய சீனி வரி மோசடி தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) கோரியுள்ளது.
தற்போதைய அரசாங்கம் 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 13ஆம் திகதி பதவிக்கு வந்ததன் பின்னர், சர்க்கரைக்கான வரி கிலோவுக்கு 50 ரூபாவிலிருந்து 25 சதமாக திடீரென குறைக்கப்பட்டது.
இதன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்ட மொத்த வரி வருமான இழப்பு 16.763 பில்லியன் ரூபா என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி சீனி இறக்குமதியாளர்களுள் ஒருவரான பிரமிட் வில்மா இந்த வரம்பற்ற வரிச் சலுகையின் மூலம் அபரிமிதமான இலாபம் ஈட்ட முடிந்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, பிரமிட் வில்மா 1,222% இலாபம் ஈட்டியுள்ளது. குறித்த வரிக் குறைப்பின் மூலம் கிடைத்த இலாபமானது மொத்த நுகர்வோருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, அனைத்து சீனி இறக்குமதியாளர்களிடமிருந்தும் இந்த வரிச் சலுகையின் மூலம் அனைத்து வரம்பற்ற இலாபத்தையும் அரசாங்கம் மீட்டெடுக்க வேண்டும் என்று கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை பரிந்துரைக்கிறது.
உரிய வரிச்சலுகைகள் மூலம் சீனியை இறக்குமதி செய்யும் வர்த்தகர்கள் பெரும் இலாபம் பொதுமக்களுக்கு நன்மை இழைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆராயவே இந்த விசேட கணக்காய்வு நடத்தப்பட்டது.
அரசாங்கம் திடீரென வரிகளை குறைத்தமையினால் அரசுக்கு சொந்தமான லங்கா சதொச நிறுவனத்திற்கு 100 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இந்த வரி குறைப்புக்கள் மூலம் அரச அதிகாரத்தை அநியாயமாகவும் தன்னிச்சையாகவும் பயன்படுத்துவதன் மூலம் இலங்கை பிரஜைகளின் உரிமைகள் மீறப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே, அந்தப் பரிந்துரைகளை விரைவில் நடைமுறைப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.