இலங்கையில் மூடப்பட்டுள்ள வைத்தியசாலைகள்! மக்களின் உயிருக்கு பாரிய ஆபத்து
இலங்கையில் கடந்த சில மாதங்களாக நிலவும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் எந்தவொரு வேலைநிறுத்தத்திலும் கலந்து கொள்ளாத சிறுவர் வைத்தியசாலையும் பணிப்புறக்கணிப்புக்கு தயாராகி வருவதாக அதன் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பொலன்னறுவை வைத்தியசாலை ஊழியர்கள் தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், மெதிரிகிரிய வைத்தியசாலை மூடப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
மேலும், கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் எரிபொருள் பெறச் சென்ற ஊழியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் நேற்று (16-07-2022) முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொடகவெல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருளைப் பெறுவதற்காகச் சென்ற சுகாதார ஊழியர்கள் இருவரை சிலர் தாக்கியுள்ளனர்.
தாக்குதலை நடத்தியவர்களை கைது செய்யுமாறு கோரி வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.