இந்தியவை உலுக்கிய கொடூரம் ; பாலினம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்ட சிறுமியின் உடல்
இந்திய தலைநகர் டெல்லியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடல் பாகத்தை நாய்கள் கடித்துத் தின்ற அவலமும் நிகழ்ந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
டில்லியின் ஸ்வரூப் நகரில், திறந்தவெளி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடல், ஆணா, பெண்ணா என அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருந்ததால், முதலில், உடல் ஆணுடையது என காவல்துறையினர் தவறுதலாக கருதியது தெரிய வந்துள்ளது.

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் மூன்று சிறார்கள் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
முதற்கட்ட விசாரணையில்தான், கண்டெடுக்கப்பட்ட உடல், சிறுமியுடையது என்றும், அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலையுண்டதும் தெரிய வந்துள்ளது.
முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டிருப்பதாகவும், பல இடங்களில் எலும்புகள் வெளியே தெரிவதாகவும், வலது கை காணாமல் போயிருப்பதாகவும் காவல்துறை கூறுகிறது.
முதலில், உடலைக் கண்டதும், அது பெண்ணுடையது என்று அடையாளம் காண முடியவில்லை. அந்த அளவுக்கு சிதைக்கப்பட்டிருந்தது.
மண்டை ஓடு, விலா எலும்பு வெளியே தெரிந்தது, நாங்கள் பார்த்தபோது, அது ஒரு நடுத்தர ஆணின் உடல் என்று நினைத்தோம் என்கிறார்கள்.
ஆனால் உடல் கூராய்வுக்குப் பிறகே, அது பெண் என்றும், பாலியல் வன்கொடுமை செய்து கொன்றிருக்கிறார்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிறகுதான், கையில் ஓரிடத்தில் மூன்று நட்சத்திரங்களை பச்சைக் குத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பிறகு, காணாமல் போன பெண்கள் குறித்து புகார் அளித்த குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியபோது, அதில் ஒருவர் வைத்திருந்த பெண்ணின் புகைப்படத்தில் அதே மூன்று நட்சத்திரம் பச்சைக் குத்தப்பட்டிருந்த பெண்தான் காணாமல் போனவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, குத்திக் கொலை செய்து வயலில் வீசியிருக்கிறார்கள். இந்தக் கொலையில் மூன்று சிறார்கள் உள்பட நான்கு பேருக்குத் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு அருகில் உள்ள பகுதிகளில் இருக்கும் சிசிடிவி கேமராக்கள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டு டெம்ரோ வாகனத்தில் குற்றவாளிகள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டு ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர் அளித்த தகவலின் அடிப்படையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.