அழிவின் விளிம்பை நெருங்கும் யாழ்ப்பாண மண்ணின் பெரும் வரலாற்று பொக்கிஷம்
யாழ்ப்பாணத்தின் வரலாற்று பொக்கிஷமாக கருதப்படும் பெரும் சிறப்புவாய்ந்த தொல்பொருள் சின்னமான சங்கிலிய மன்னனின் மந்திரி மனை அழிவை சந்தித்து வருகின்றது.
யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரில், யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் சட்டநாதர் கோயில் பகுதியில் சங்கிலிய மன்னனது மந்திரிமனை அமைந்துள்ளது.

வரலாற்று பொக்கிஷம்
இது கம்பீரமான தோற்றத்தையும், வேலைப்பாடுகளையும் உடைய கட்டிடமாகும். போத்துக்கீசரிடம் யாழ்ப்பாணம் வீழ்வதற்குமுன் அக்கால அமைச்சர் ஒருவரின் இருப்பிடம் இதுவென கூறப்படுகிறது.
இத்தகைய வரலாற்று பொக்கிஷம் பல வருடங்களாக படிப்படியாக சிதைந்து வரும் தருவாயில் பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலையிலும் மீளுருவாக்கம் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.
மந்திரிமனை கட்டடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்டதனை அடுத்து அதனை தாங்கி பிடிக்க கம்பிகள் நடப்பட்டிருந்ததுடன் , மந்திரி மனையை புனரமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன எனினும் கடந்த காலங்களில் பெய்த மழையால் மந்திரிமனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்தது.

இந்நிலையில் அண்மையில் வெளியான காணொளி ஒன்றில் குறித்த அரண்மனை முழுமையாக சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றமை தெரியவருகின்றதுடன் இந்நிலை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அரண்மனையின் சில இடங்களை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் சுவர்களில் மரங்கள் வளர்ந்து வெடிப்பு கள் ஏற்பட்டுள்ளதுடன் அப்பகுதி முழுவதும் பலத்த சேதமடைந்துள்ள நிலையில் காணப்படுகின்றமை குறித்த காணொளியில் காணமுடிகின்றது. அத்துடன் கூரைகள் அவற்றை தாங்கும் பலகைகள் என்பன இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன.
இந்நிலை தொடருமாக இருந்தால் எஞ்சியிருக்கும் முகப்பு பகுதி உள்ளிட்ட ஒரு சில பகுதிகளை கூட பாதுகாத்து மீட்டெடுக்க முடியாத நிலை ஏற்படும் என பொதுமக்கள் கவலை வெளியிடுகின்றனர். இத்தகைய தமிழர்களின் வரலாற்று பொருன்மைகளை பாதுகாத்து பராமரிக்க வேண்டியது சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் முக்கிய கடமை எனவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.