மலையகப் பகுதியில் அனைத்து பொலிஸ் நிலையங்களில் இனி தமிழ் அதிகாரிகள்
மலையகப் பகுதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் மிக விரைவில் தமிழ் மொழி பேசும் அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் இன்று (27) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

பொலிஸார் உதவி
இந்தக் கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ஆனந்த விஜயபால, மலையக மக்கள் தங்களின் முறைப்பாடுகளைச் சுயமொழியில் தடையின்றி வழங்குவதை உறுதி செய்ய விரைவில் தமிழ் அதிகாரிகளைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.
அத்துடன், மலையகப் பகுதிகளில் நீண்டகாலமாகப் பெரும் சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ள சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையை முழுமையாகத் தடை செய்வதற்குப் பொலிஸாரின் உதவியுடன் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சபரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் மற்றும் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.