உலகளவில் ஹீரோ ; நல்லூரான் சிவாச்சரியாருக்கு நிர்மலா சீதாராமன் பாராட்டு
வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் பூசகர்களில் ஒருவரான 'நல்லூரான் கட்டியம்' புகழ் விஸ்வ பிரசன்ன சிவாச்சாரியாரை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழ்ந்து பாராட்டினார்.
இலங்கைக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வமாக விஜயம் செய்துள்ள இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெள்ளிக்கிழமை (03) நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.
நல்லூரான் கட்டியம் உலகளவில் பிரபலம்
இதன்போது, அங்கு கூடியிருந்தவர்களிடம் நல்லூர் கந்தசுவாமி கோயில் பூசகரின் பெயர் என்ன என்று கேட்க, அங்கிருந்தவர்கள் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இறைப்பணி ஆற்றும் விஷ்வ பிரசன்ன சிவாச்சாரியாரை பற்றி கூறியுள்ளனர்.
அதற்கு அவர், "விஸ்வ பிரசன்ன சிவாச்சாரியார் உலகளவில் தற்போது ஹீரோ" என தெரிவித்தார். அதுமட்டுமல்லாது , நல்லூர் ஆலய மஹோற்சவ காலத்த்தின்போது சிவாச்சாரியார் கட்டியம் கூறுவதையும் புகழ்ந்து பாராட்டினார்.
நல்லூர் கந்தசுவாமி கோயிலின் 25 நாள் மஹோற்சவத்தின்போது நடைபெறும் ஒருமுகத் திருவிழா - வேட்டை திருவிழாவில் விஸ்வ பிரசன்ன சிவாச்சாரியார் கட்டியப் பொல் பிடித்தபடி உரத்த குரலில் சொன்ன "ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீமான் மகா ராஜாதிராஜ ராஜ கம்பீர ராஜ மார்த்தாண்ட...." என தொடங்கும் கட்டியம் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது.
அதுமட்டுமல்லாது , இலங்கையில் மட்டுமன்றி கடல் கடந்து இந்திய ஊடகங்களும் அதனை பெருமையுடன் செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நல்லூரான் கட்டியம்
"ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீமான் மகா ராஜாதிராஜ
ராஜ கம்பீர ராஜ மார்த்தாண்ட
ராஜ குலோத்துங்க ராஜ குலதிலக
ஈரேழு பதினான்கு லோகத்தின் அதிபதி , நாடாளும் நாயகன்
அழகன் குழகன்
ஆனந்த ஜித்தன், நல்லூர்ப்பதி காவலன்
நல்லூர் அடியார் காதலன் அரண்
அண்டசராசர ப்ரபஞ்சோத்பத்திநிமித்த காரணன், வேதத்தின் நாயகன் , வேள்வியின் தாயவன்
முறை ஆகமப் பொருளவன்
முத்தமிழ் ஆனவன்
நல்லூர் கந்தசாமியார் பரியேறி வாரார்" என கடல் தாண்டி, கம்பீரமாய், ஒலிக்கும் நல்லூரான் கட்டியம்.