எந்த கால நிலையையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்ட ஹெலிகாப்டர்; விபத்துக்குள்ளானது எப்படி? தொடரும் மர்மம்
தமிழகத்தின் குன்னூரில் விபத்துக்குள்ளான இராணுவ ஹெலிகாப்டர் தொடர்பில் ஆச்சர்யமுட்டும் பல தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஹெலிகாப்டர் விபத்து எப்படி ஏற்பட்டது என்பது மர்மமாகவே உள்ளது.
குறித்த இராணுவ ஹெலிகாப்டர் ஸ்லைடிங் கதவு, பாராசூட், அதிநவீன தேடுதல் கருவிகள், எமர்ஜென்சி ஏற்பட்டால் தண்ணீர் (கடல் )பரப்பில் மிதக்கும் வசதி, நைட் விஷன், ரேடார், தானியங்கி பைலட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் இந்த ஹெலிகாப்டரில் இடம்பெற்றுள்ளன.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்து இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம், அதில் பயணித்தவர் இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத். மொத்தம் 14 பேர் ஹெலிகாப்டரில் இருந்த நிலையில், அவர்களில் 11 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதில், பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி என்ன ஆனார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், ராணுவத்தில் உச்சபட்ச பொறுப்பில் இருக்கும் ஒருவர் செல்லும் ஹெலிகாப்டர், எத்தகைய பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. விபத்தை சந்தித்த ஹெலிகாப்டர் Mi 17V5 என்ற வகையை சார்ந்தது.
ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர் ராணுவ துருப்புகளை இடமாற்றம் செய்வது, கண்காணிப்பு பணிகள், பேரிடரின்போது மீட்பு நடவடிக்கை உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும் எனவும் கூறப்படுகின்றது. பாலைவனம், கடல் மேற்பரப்பு, வெப்பமண்டலம், குளிர் பகுதிகள் என எந்த கால நிலையையும் எதிர்கொண்டு, பயணிக்கும் ஆற்றல், இந்த ஹெலிகாப்டருக்கு உண்டு.
அதிகபட்சமாக 13 ஆயிரம் கிலோ எடையை எம்.ஐ. 17-ல் ஏற்றிக் கொள்ள முடியும். 36 பேர் வரை அமர்ந்து செல்லும் இந்த ஹெலிகாப்டரில் இன்று, தலைமை தளபதி உள்பட 14 பேர் மட்டுமே பயணித்துள்ளனர். ஸ்லைடிங் கதவு, பாராசூட், அதிநவீன தேடுதல் கருவிகள், எமர்ஜென்சி ஏற்பட்டால் தண்ணீர் (கடல் )பரப்பில் மிதக்கும் வசதி, நைட் விஷன், ரேடார், தானியங்கி பைலட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் இந்த ஹெலிகாப்டரில் இடம்பெற்றுள்ளன.
மணிக்கு அதிகபட்சமாக 250 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் எம்.ஐ. 17 ஹெலிகாப்டர், 6 கிலோ மீட்டர் உயரம் வரை செல்லும் திறன் கொண்டது. தாக்குதலை பொருத்தவரையில், Shturm-V ஏவுகணைகள், S-8 ராக்கெட்டுகள், 23mm மெஷின் துப்பாக்கி மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் துப்பாக்கிகளை, ஹெலிகாப்டரில் இருந்தவாறே கையாள முடியும். அதேவேளை ஹெலிகாப்டரின் எரிபொருள் டேங்க், வெடித்து சிதறாத அளவுக்கு வேதியியல் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தனை பாதுகாப்பு அம்சங்கள் இருந்தும், எதற்காக விபத்து ஏற்பட்டது என்பது தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை. அத்துடன் விபத்தை நேரில் பார்த்தவர்கள், ஹெலிகாப்டர் மிகவும் தாழ்வாக சென்றதாக கூறியுள்ளனர்.
ரஷ்யாவின் ரோசோபோரான் எக்ஸ்போர்ட் என்ற நிறுவனம்தான் Mi 17V5 ஹெலிகாப்டரை இந்தியாவுக்கு வழங்கியது. 2008-ல் 80 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, அவை 2013-ல் டெலிவரி முழுமையாக செய்யப்பட்டன.
இந்நிலையில் தற்போது இதே ரக ஹெலிகாப்டா 71 எண்ணிக்கையில் வாங்குவதற்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

