சீன கப்பல் விவகாரம்; ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடும் அழுத்தம்; பின்னனியில் பசில்!
சீன ஆய்வு கப்பலின் வருகையை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அமெரிக்கப் பிரதிநிதி ஒருவர் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இந்த கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எந்தவொரு நாட்டின் போர்க்கப்பல்களும் நம்நாட்டின் துறைமுகத்திற்கு வர அனுமதி வழக்கப்படுகின்ற நிலையில், சீன கப்பல் வருவதில் என்ன தவறு எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, யுவான் வான் 05 என்ற சீன ஆய்வு எதிர்வரும் 11ம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வருகை தரவிருந்த நிலையில், அதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கி இருந்தது.
எனினும், சீன கப்பலின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன், கப்பலின் வருகையை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்திருந்தது. இதனையடுத்து இலங்கை அரசாங்கம் கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு சீன அரசாங்கத்திடம் கோரியிருந்த நிலையில் சீன அரசாங்கம் கடும் அதிருப்தி வெளியிட்டது.
அதேசமயம் , சீன கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கியதன் மூலம் இலங்கை அரசாங்கம் பாரதூரமான இராஜதந்திர அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.