குப்பை கொட்டினால் கடும் தண்டனை நிச்சயம் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கண்டி மாநகர சபை எல்லைக்குட்பட்ட 7 மண்டலங்கள் டெங்கு அதி-அவதான வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து, முறையற்ற வகையில் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க மாநகர சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
கடந்த வாரத்தில் மாத்திரம் கண்டி மாநகர எல்லைக்குள் 108 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

எச்சரிக்கை
இவர்களில் பெரும்பாலானோர் கண்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதி, பேராதனை வீதி, பஹிரவகந்த, நித்தவெல தேவி வீதி மற்றும் ஹீரஸ்ஸகல ஆகிய பகுதிகளிலிருந்தே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது குறித்து நேற்று (06) கண்டி மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கண்டி மாநகர பிரதம மருத்துவ அதிகாரி கிரிஷாந்த மாசாச்சி பின்வருமாறு குறிப்பிட்டார்.
"பொதுமக்கள் முறையற்ற விதத்தில் சூழலில் வீசியெறிந்த யோகட் கோப்பைகள் மற்றும் குளிர்பான பானப் போத்தல்களிலிருந்தே டெங்கு நுளம்புகள் அதிகம் பரவியுள்ளன.
நீர் தேங்கி நிற்கக்கூடிய பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிப் போத்தல்களை இவ்வாறு பொறுப்பற்ற முறையில் சூழலில் வீசுவது, ஒருவகையில் கொலை முயற்சிக்கு இணையானதாகும்." என கூறினார்.
அத்துடன் தற்போது கண்டி தேசிய மருத்துவமனையில் 110 நோயாளர்களும், பேராதனை போதனா மருத்துவமனையில் 90 நோயாளர்களும் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.