யாழ்ப்பாணம் உட்பட பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
நாட்டில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் வறண்ட வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய,இன்று காலை 6 மணி நிலவரப்படி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் போன்ற பகுதிகளில் வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகியுள்ளது.
காற்றின் வேகம் குறைவடைவதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மக்களின் உடல் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அத்திணைக்களம் எச்சரித்துள்ளது.
நிலவும் கடுமையான வறட்சியின் காரணமாக அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் நீர்த்தேக்கங்கள் வற்றியுள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.