எலிக்காய்ச்சல் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
இலங்கையில் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஐ நெருங்கியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் விசேட நிபுணர் மருத்துவர் துஷானி தாபரேரா மற்றும் சுகாதார அதிகாரிகள் முக்கிய தகவல்களை வழங்கியுள்ளனர்.

2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 18,000 நோயாளர்கள்
அதன்படி, 2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 18,000 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த 2025ஆம் ஆண்டில் இந்த நோயினால் சுமார் 200 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகில் அதிகப்படியான எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக மருத்துவர் துஷானி தாபரேரா குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, தசை வலி மற்றும் கண்கள் சிவப்படைதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அதனை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் கலந்த நீர் அல்லது மண், மனித உடலில் உள்ள காயங்கள், வெட்டுக்கள் அல்லது மெல்லிய சவ்வுகள் ஊடாக உடலுக்குள் செல்வதன் மூலம் இந்த பாக்டீரியா தொற்று ஏற்படுகின்றது.
இரத்தினபுரி, காலி, கேகாலை, களுத்துறை, மொனராகலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
குறிப்பாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அறிகுறிகள் தென்பட்டவுடன் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனைகளைப் பெறுமாறும் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.