கோயில் தேர் திருவிழா பவனியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய
கொழும்பு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி கோயிலின் வருடாந்த ஆடிவேல் திருவிழாவையொட்டி நேற்று (07) அலரி மாளிகைக்கு முன்பாக வீதி உலா சென்ற போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தேர்ப் பவனியில் கலந்துகொண்டார்.
கோயில் தேருக்கு அர்ச்சனைத் தட்டு வழங்கி வழிபாடுகளில் ஈடுபட்டார். நாதஸ்வர இசை முழங்க, பிரதமரை வேல் ரதத்திற்கு அருகாமையில் அழைத்துச் சென்று, அவரிடம் அர்ச்சனைத் தட்டை பெற்றுக்கொண்டனர்.
விசேட பூஜை
பின்னர், அலரி மாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த விசேட பீடத்திற்கு அழைத்துச் சென்று, பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் ஆசீர்வாதம் வேண்டி, விசேட பூஜை ரமேஷ் குருக்களினால் நடத்தப்பட்டது.
இந்த விசேட ஆசீர்வாத பூஜையைத் தொடர்ந்து, பாரம்பரிய முறைப்படி நாதஸ்வர இசை முழங்க, பிரதமரை மீண்டும் அலரி மாளிகைக்கு அழைத்துச் செல்ல, தேர்த்திருவிழாவின் ஏற்பாட்டுக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, பிரதமர் ஏற்பாட்டுக் குழுவினருக்கு தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார். பிரதமருடன் பிரதமர் செயலாளர் பிரதீப் சபுதந்திரியும் பிரதமரின் அலுவலக ஊழியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.