பூட்டான் பிரதமரை சந்தித்த கலாநிதி ஹரிணி அமரசூரிய
2026ஆம் ஆண்டின் விழிப்புணர்வு மிக்க உணவு முறைமைகள் பற்றிய உலக உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit - GCFSS) முதன்மை உரையாற்றுநராகக் கலந்துகொள்வதற்காகப் பூட்டானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பூட்டான் பிரதமர் தாஷோ செரிங் தோப்கேவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பானது திம்பு நகரில் இடம்பெற்றுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இருதரப்பு உறவுகள்
இலங்கைக்கும் பூட்டானுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது குறித்து இச்சந்திப்பின்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கல்வி, சுகாதாரம், வர்த்தகம், சுற்றுலாத் துறை, வான்வழித் தொடர்பு மற்றும் இரு நாட்டு மக்களுக்கிடையிலான தொடர்புகள் உள்ளிட்ட, இரு தரப்பினருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல பரந்த துறைகள் தொடர்பிலும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
இதன்போது, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளுதல், காடழிப்பைத் தடுத்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான அபிவிருத்தியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது தொடர்பிலும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் நட்புறவை மேலும் பலப்படுத்துவதற்கும், பரஸ்பர ஆர்வமிக்க பல்வேறு துறைகள் ஊடாக இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்குமான இரு நாடுகளினதும் அர்ப்பணிப்பை இச்சந்திப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது.