அரசாங்க வேலைக்கு காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
அரசாங்க சேவைக்கு புதிதாக 26 ஆயிரத்து 95 பேரை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய, 23ஆயிரத்து 344 ஆசிரியர்களும் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய வெற்றிடங்கள்
அரச சேவையின் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில், அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையிலான அதிகாரிகள் குழு முன்வைத்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் ஒரு குறிப்பிட்ட கால அட்டவணையின் கீழ் முறைப்படியாக முன்னெடுக்கப்படும்.
குழு பரிந்துரைத்துள்ள குறித்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை அந்தந்த அமைச்சுகள் மற்றும் நிறுவனங்கள் ஊடாக முன்னெடுப்பதற்கு பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.