இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு ; விசாரணையில் வெளியான அதிர்ச்சி காரணம்
மாளிகாவத்தை பகுதியில் இன்று (3) முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானை இம்ரானை பழிவாங்கும் நோக்கில் இடம்பெற்ற செயற்பாடாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று முற்பகல் 11.20 மணியளவில் பதிவானது.
துப்பாக்கிச் சூடு
மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்திற்கு 100 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள முச்சக்கரவண்டிகளுக்கான உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்த இளைஞன் ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞன், சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் T - 56 துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளர், குற்றவாளியான கஞ்சிபானை இம்ரானின் நண்பர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, கஞ்சிபானை இம்ரானை பழிவாங்கும் நோக்கில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் கூறுகின்றனர்.