சேதங்களை மறைக்கும் வளைகுடா நாடுகள்; வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்!
போரினால் ஏற்பட்ட சேதங்களை வளைகுடா நாடுகள் மறைத்த நிலையில், அந்த தகவல்களை சர்வதேச ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.
ஹோர்முஸ் நீரிணையில் ஈரானியக் கப்பல்களின் முற்றுகைகளைத் தவிர்ப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தால் பயன்படுத்தப்படும் பிரதான எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் துறைமுக வசதியான 'ஃபுஜைரா' (Fujairah) எண்ணெய் வளாகத்திலுள்ள எரிபொருள் சேமிப்புத் தாங்கிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஃபுஜைரா பகுதி மீது 19 முறை ஈரான் தாக்குதல்
மோதல்கள் ஆரம்பமானது முதல், ஃபுஜைரா பகுதி குறைந்தது 19 முறையாவது ஈரானியத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னையத் தாக்குதலொன்றின் போது மூன்று நாட்களாகத் தீ பரவியிருந்தது.
வளைகுடா பிராந்தியம் முழுவதிலும் உள்ள உட்கட்டமைப்பு அமைப்புகளை இலக்கு வைத்து ஈரான் குறைந்தது 135 ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை நடத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த தாக்குதல்கள் பல கட்டமைப்பு சார்ந்த இடையூறுகளை ஏற்படுத்திய போதிலும், பாதிக்கப்பட்ட வளைகுடா நாடுகள் பெரும்பாலும் சேதத்தின் அளவை மறைக்க முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீழ்ந்த இடிபாடுகளால் மட்டுமே சேதம் ஏற்பட்டது என அதிகாரப்பூர்வ அறிக்கைகள் உரிமை கோரிய போதிலும், இந்த தாக்குதல்கள் பிராந்தியத்தின் மிக முக்கியமான சில இடங்களையே உண்மையில் தாக்கியுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.
போர் தொடங்கியதில் இருந்து, ஈரான் மற்றும் அதன் சார்பு அமைப்புகளால் வளைகுடா பிராந்தியத்தின் உட்கட்டமைப்புகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தொடர்ச்சியான துல்லியமான தாக்குதல்கள் முக்கிய உபகரணங்களைச் செயலிழக்கச் செய்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.