நூற்றாண்டின் மிகப்பெரும் பேரழிவு; 15000ஐ தாண்டிய பலி எண்ணிக்கை
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
துருக்கியில் கடந்த திங்கள்கிழமை பொதுமக்கள் பலரும் தூங்கிக் கொண்டிருந்த போது நிலநடுக்கம் ஏற்பட்டதால் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. துருக்கியில் இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கமாக இது பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் துருக்கி மட்டுமின்றி சிரியாவிலும் நிலநடுக்கம் மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
15 ஆயிரத்தை தாண்டிய பலி
ஈடுபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது. துருக்கியில் மட்டும் இதுவரை 12,931 பேரும் சிரியாவில் 2992 பேருமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,383ஆக உயர்ந்துள்ளது.
கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. அவர்கள் சிக்கியுள்ள இடங்களைக் கண்டறிந்து, பத்திரமாக மீட்கும் பணிகளும் தீவிரமாக இடம்பெற்று வந்தாலும், கடுமையான குளிர் மீட்புப் பணிகளில் ஈடுபடுவோருக்குச் சவாலைக் கொடுத்து வருகிறது.
அதேவேளை துருக்கி நாட்டிற்கு உலகின் பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ள அதேநேரம் மீட்புப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என குற்றசாட்டுக்களும் முன்வைக்கபட்டுள்ளன.
இதில் சற்று குறைபாடுகள் உள்ளதை ஒப்புக் கொள்வதாகத் தெரிவித்த துருக்கி அதிபர், மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
பிந்திய நில அதிர்வு
பொதுவாக நிலநடுக்கத்தை விட அதன் பிறகு ஏற்படும் நில அதிர்வுகளில்தான் (aftershocks) அதிக பாதிப்பு ஏற்படும். முதல் நிலநடுக்கத்தில் தப்பிப் பிழைத்த பலவீனமான கட்டிடங்களும் கூட இதில் தரைமட்டமாகிவிடும்.
துருக்கியில் முதலில் பதிவான நிலநடுக்கத்திற்குப் பின், ரிக்டரில் 4க்கு மேலான 100க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் (aftershocks) பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நேரம் செல்ல செல்ல இந்த நிலநடுக்கத்திற்கு பிந்தைய நில அதிர்வுகளின் எண்ணிக்கையும் வலிமையும் தொடர்ந்து குறைந்தே வரும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.