கொரோனாவால் மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ; ஆண்களிற்கே பாதிப்பு அதிகம்
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, கடந்த ஆண்டு, COVID-19 தொற்று காரணமாக மக்களின் ஆயுட்கால எதிர்பார்ப்பு பெருமளவு குறைந்துள்ளதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஆயுட்கால எதிர்பார்ப்பு கடந்த ஆண்டு, சுமார் 6 மாதம் குறைந்ததாக ஆய்வில் தெரியவந்தது.
அத்துடன் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சிலி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஆய்வில் பகுப்பாய்வு செய்யப்பட்ட 29 நாடுகளில் 22 இல் 2019 ஆம் ஆண்டன் உடன் ஒப்பிடும்போது ஆயுட்காலம் ஆறு மாதங்களுக்கு மேல் குறைந்துள்ளது.
இவ்வாறு ஒட்டுமொத்த 29 நாடுகளில் 27 நாடுகளில் ஆயுட்காலம் குறைந்துள்ளது. இந்நிலையில் பல்வேறு நாடுகளில் ஆயுட்கால எதிர்பார்ப்பு குறைந்ததற்கு, COVID-19 நோய்ப்பரவலால் ஏற்பட்ட மரணங்கள் காரணமாக இருக்கலாம் என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கூறுகிறது.
பெரும்பாலான நாடுகளில் பெண்களை விட ஆண்களின் ஆயுட்காலம் அதிக வீழ்ச்சியாக இருந்தது. அமெரிக்காவில் ஆண்களின் ஆயுட்காலத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி அமெரிக்காவில் 2019 உடன் ஒப்பிடும்போது 2.2 ஆண்டுகள் ஆயுட்காலம் குறைந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, 15 நாடுகளில் ஆண்களின் ஆயுட்காலம் ஒரு வருடத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அந்த ஆய்வின் தகவல்கள் தெரிவிக்கின்றன.