மட்டக்களப்பு வைத்தியசாலைக்குள் நுழைந்த யானையால் பெரும் பீதி! மயிரிழையில் உயிர் தப்பிய காவலாளி
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் இன்று (20) அதிகாலை காட்டு யானை ஒன்று புகுந்தமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிகாலை வேளையில் வைத்தியசாலைக்குள் நுழைய முயன்ற காட்டு யானையைத் தடுத்து நிறுத்த முயன்ற பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த காவலாளி ஒருவரை யானை தாக்க முற்பட்டுள்ளது.

மயிரிழையில் உயிர் தப்பிய காவலாளி
இதன்போது காவலாளி மிகச் சாமர்த்தியமாகச் செயற்பட்டு மயிரிழையில் உயிர் தப்பிய போதிலும், அவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
யானையின் திடீர் ஊடுருவல் காரணமாக நோயாளிகள், வைத்தியர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் மத்தியில் பெரும் அச்சமும் பதற்றமும் நிலவியது.
வைத்தியசாலை வளாகத்திலிருந்து வெளியேறிய காட்டு யானை, பிரதான வீதி ஊடாகச் சென்று தேற்றாத்தீவு பகுதிக்குள் நுழைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த யானையை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினரும், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் முன்னெடுத்து வருகின்றனர்.
காட்டுப் பகுதிகளில் இருந்து யானைகள் மீண்டும் நகரங்களை நோக்கி வரத் தொடங்கியுள்ளமை இப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.