கிராம உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
தொழிற்சங்க நடவடிக்கையை இன்றையதினம் (18-08-2024) நள்ளிரவு முதல் தற்காலிகமாக நிறுத்துவதாக கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிராம உத்தியோகத்தர், தேர்தல் உத்தியோகத்தர் என்பதால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் நோக்கில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அதன் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கிராம அலுவலர் சேவை யாப்பு மற்றும் கிராம அலுவலர் கொடுப்பனவுகளை தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரி நாடளவில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் கடந்த மே மாதம் 4ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்கினர்.
இருப்பினும், கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பினால் ஒகஸ்ட் 12ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கறுப்புப் போராட்ட வாரத்தை ஆரம்பித்திருந்த நிலையில், அது இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக அந்த கூட்டமைப்பின் இணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மே 17ஆம் திகதி முதல் இதுவரை காலமும் கிராம உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட சட்டப்படி சேவை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையும் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணைத் தலைவர் மேலும் தெரிவித்தார்.