திங்கட்கிழமை முடங்குமா அரச சேவைகள்? பணிப்புறக்கணிப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் பங்கேற்பு
வரவு - செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்குச் சலுகைகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 30ஆம் திகதி பல தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்புக்கு தயாராகி வருகின்றன.
இந்நிலையில் வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள நாடளாவிய பணிப்புறக்கணிப்புக்கு ஒத்துழைப்பு வழங்க ஏகமனதாகத் தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

தீர்மானம்
வெள்ளிக்கிழமை (27) நடைபெற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் இலவச சுகாதார சேவையின் முன்னோடிப் பங்களிப்பை வழங்கி, மிக முக்கியமான பணியை ஆற்றுபவர்கள் நாட்டின் விஷேட வைத்தியர்களும் வைத்தியர்களுமாவர்.
எனினும், பொருளாதார அநீதி மற்றும் சாதகமற்ற தொழிற் சூழல் காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை உருவாகியுள்ளதால், இலவச சுகாதாரக் கட்டமைப்பின் எதிர்காலத்திற்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
வைத்தியர்கள், வைத்தியசாலைக் கட்டமைப்பு மற்றும் சுகாதார சேவையின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு அரச தரப்பினரிடம் பலமுறை பேச்சுவார்த்தைக்கான கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், இதுவரை அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படாதது கவலைக்குரிய விடயமாகும்.
பொருத்தமான தீர்வுகளையும் பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பத்தையும் தொடர்ந்து கோரியும் சாதகமான பதில் கிடைக்க வில்லை எனவும், அரசாங்கம் திட்டமிட்டே வைத்தியர்களைத் தொழிற்சங்க நடவடிக்கைகளை நோக்கித் தள்ளும் நிலை உருவாக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதற்கமைய, எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தை நாட்டின் வைத்தியசாலைக் கட்டமைப்பின் 'கறுப்பு வாரமாக' பிரகடனப்படுத்தி, மதத் தலைவர்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் சாதகமான பதில் வழங்கப்படாத பட்சத்தில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது மற்றும் தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கும் அதிகாரத்தை நிறைவேற்றுக் குழுவிற்கு வழங்குவதும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.