இவர்களுக்கு முன் அரசாங்கம் மண்டியிட்டிருக்கின்றது! நாடாளுமன்ற உறுப்பினர்
தற்போதைய அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியாமல் கறுப்புக்கடை வியாபாரிகளுக்கு முன்னால் மண்டியிட்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (8) இடம்பெற்ற கைத்தொழில் அமைச்சு, வர்த்தக அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், சந்தையில் அத்தியாவசிய பொருட்கள் நினைத்த பிரகாரம் விற்பனை செய்யப்படுகின்றது. அதனை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசாங்கம் இருக்கின்றது. இன்று பொருட்களின் விலை நாளுக்குநாள் அதிகரித்துச்செல்கின்றது. விலைக்கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பலத்தை பெற்றுக்கொண்டுள்ளர்.
இந்நிலையில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கான தண்டப்பணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இறுதியில் அரசாங்கத்துக்கு கறுப்புக்கடை வியாபாரிகளை கட்டுப்படுத்த முடியாமல்போயிருகின்றது. அதேபோன்று இன்று சதொச நிறுவனத்துக்கு வந்த வெள்ளைப்பூண்டு கொடுக்கல் வாங்களில் 26 யிரம் மில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றிருக்கின்றது. சீனி இறக்குமதியில் 15 யிரம் மில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றிருக்கின்றது.
அதேபோன்று லிட்ரோ கேஸில் ஆயிரத்தி 100 கோடி மோசடி இடம்பெற்றிருப்பதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைவர், முன்னாள் தலைவர் மீது குற்றம் சுமத்துகின்றார். லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவரை நியமித்தது, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ. தற்போதைய தலைவரை நியமித்தது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ. அதனால் யார் திருடர் என்பது அவர்களுக்குத்தான் தெரியும்.
அதனால் வர்த்தக அமைச்சு கறுப்புக்கடை வியாபாரிகள் கைப்பற்றிக்கொண்டு, மக்களை சூறையாடி வருகின்றனர். அத்துடன் தேசிய தொழிற்சாலையை கட்டியெழுப்புவதாக தெரிவித்தே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று பாதணி தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதை அரசாங்கம் தடை செய்திருக்கின்றது.
இதற்கு டொலர் பற்றாக்குறையே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. அதனால் பாதணி தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அங்கு தொழில் செய்யும் 5இலட்சம் பேரின் தொழில் இல்லாமல்போகும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது.ஆனால் அரசாங்கத்துக்கு உதவி செய்துவரும் விபாயாரிகளுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய டொலர் இருக்கின்றது.
அத்துடன் காஸ் சிலிண்டர் வெடிப்புக்கான காரணம் அதன் இரசாயன அளவையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் என்பதை அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார். அப்படியாயின் குறித்த நிறுவனத்துக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றது. மக்களின் வீடுகளுக்கு குண்டை அனுப்பியதனால், வீடுகளில் இன்று காஸ் குண்டுகள் வெடித்து வருகின்றன.
அந்த கேஸ் குண்டுகளை வீடுகளுக்கு அனுப்பிய நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதில்லை. இது புதுமையான நாடு. இவ்வாறான நாடு உலகில் எங்கேயும் காணமுடியாது. எனவே கேஸ் சிலிண்டர் வெடிப்புக்கு காரணம் அறிந்தும் அதற்கு சம்பந்தப்பட்டவர்களை சட்டத்துக்கு முன்னால் நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் இந்த நடவடிக்கைக்கு பின்னால் இருப்பது நாட்டின் நிறைவேற்று அதிகாரிக்கு தேவையானவர்கள்.
அப்படியானால் கேஸின் கவலையில் மாற்றம் செய்ததை ஜனாதிபதிக்கு தெரியும். ஜனாதிபதி அறிவுறுத்தியே இதனை செய்திருக்கவேண்டும். முடியுமானால் இல்லை என்று சொல்லட்டும்.
இந்த நிறுவனத்தின் அதிகாரிகளை கைதுசெய்தால், இந்த அரசாங்கத்தில் இருக்கும் அரசியல் தலைவர்கள் அனைவரும் வெளிப்படுவார்கள். இதன் பின்னணியில் இருப்பவர்கள் அனைவரும் தெரியவரும் என்றார்.