வரிசையில் இருப்பவர்களை அகற்ற இராணுவ உதவியை நாடிய அரசாங்கம்!
எரிபொருள் வரிசையில் இருப்பவர்களை அகற்ற இராணுவ உதவியை நாடியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர், தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு, தற்போது வரிசையில் இருப்பவர்களை அகற்ற வேண்டும் எனவும் கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
தற்போது எரிபொருள் வரிசையில் இருப்பவர்களும் உடனடியாக எரிபொருள் அனுமதிச் சீட்டுக்காக இணையத் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றார். வரிசையில் நிற்பவர்களையும் புதிதாகப் பதிவுசெய்யப்பட்டோரையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது என்பதால் அவர்களை எரிபொருள் நிலைய வரிசைகளில் இருந்து அகற்றுவதற்கு பாதுகாப்புத் தரப்பினர் உதவுவார்கள் என்றும் கூறினார்.
அதேசமயம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இனி எரிபொருள் அனுமதிச்சீட்டின் கீழ் மட்டுமே இயங்கும் என்றும் வரிசையில் நின்றால் எரிபொருள் கிடைக்காது என்றும் சுட்டிக்காட்டினார்.
எனினும் எரிபொருள் அனுமதிச் சீட்டு நடைமுறைப்படுத்தப்படும் வரை லங்கா ஐஓசி நிறுவன எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழமை போன்று இயங்கும் என்றும் அதன் பின்னர் முழு நாடும் ஒரே முறையை பின்பற்றும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் ஒரு குறிப்பிட்ட தனிநபரோ அல்லது நிறுவனமோ ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை வைத்திருந்தால், ஒவ்வொரு வாகனத்துக்கும் தனித்தனி ஓட்டுனர் இருக்கக்கூடும் என்றும், ஒரு வாகனத்தை ஒரு தேசிய அடையாள அட்டையின் கீழ் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.