பொருளாதாரத்தை கையாள்வது குறித்து அரசாங்கம் குழப்பத்தில்
நாட்டின் பொருளாதாரத்தை கையாளும் விவகாரத்தில் அரசாங்கம் முற்றிலும் குழப்பமடைந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும், பொதுமக்களை ஏமாற்ற பொய்கள் கூறும் வேலையை திறமையாக செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் ஊழலை எதிர்த்துப் போராடும் முயற்சியில் அரசு சிறப்பாக செயல்படுவது போல் தென்படுகின்றது எனினும், ஈ-விசா மோசடி விவகாரத்தில் இதுவரை எதுவும் செய்யப்படவில்லை, என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈ-வீசா மோசடியை தடுக்க தாம் கடுமையாக போராடியதாக அவர் தெரிவித்துள்ளார். “பொருளாதாரத்தில், அவர்கள் முற்றிலும் குழப்பத்துடனும் எதிர்மாறான கருத்துகளுடனும் செயல்படுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்தவ மதபோதகர் விஹாரையில் பௌத்த மத போதனை செய்வது போன்று அரசாங்கத்தின் கொள்கைகள் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு புறம், அவர்கள் நாட்டை உலக வர்த்தகத்திற்காகத் திறக்க வரி குறைப்பை வலியுறுத்துகிறார்கள்.
மற்றொரு பக்கம், இறக்குமதி மாற்றீடுகளை ஊக்குவிக்க அதிக வரிகளை வலியுறுத்துகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தொடர்பாக, தனியார் முதலீடுகள் வேண்டாம் என மீண்டும் மாற்றியமைத்து, தற்போது பொது நிதியுடன் விரிவாக்க திட்டங்களை கூறுகிறார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் பொய்களை மக்கள் நம்பச் செய்வதே சிறந்த செயல்திட்டமாக அமைந்துள்ளது என ஹர்ஷ டி சில்வா விமர்சித்துள்ளார்.