யாழில் அரச காணியை ஆட்டையை போட்ட அரச அதிகாரி; அம்பலமான தகவல்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் அரச காணியை அடாத்தாக சுவீகரித்த அரச உத்தியோகத்தரின் குடும்பத்தை காணியில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் உள்ள அரச காணி ஒன்று அடாத்தாக எந்தவித அனுமதியும் இன்றி மதில்களை அமைத்து பயன்படுத்தப்பட்டு வந்தது.
அரச காணிக்கு சொந்தம் கொண்டாடிய இருவர்
குறித்த காணியில் இருப்பவர் எந்தவித அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக அரச காணியை சுவீகரித்திருப்பதால் உடன் சம்மந்தப்பட்டவர்களை வெளியேற்றுமாறு பல முறை மருதங்கேணி கிராம அலுவலரால் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
அதேவேளை அந்த காணியை மேலும் ஒரு குடும்பம் உரிமை கோரி வந்ததால் பல முரண்பாடுகள் தோன்றுவதாலும் உடன் நடவடிக்கை எடுக்குமாறும் மருதங்கேணி கிராம மட்ட அமைப்புகளாலும் தெரியப்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் அரச காணியை அடாத்தாக பிடித்திருப்பது உறுதியாகிய நிலையில் குறித்த காணியை சுவீகரித்துள்ள அரச உத்தியோகத்தரின் குடும்பத்தை ஒரு மாத காலப்பகுதிக்குள் காணியை கிராம அலுவலரிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறுமாறு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலரால் உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளராக பதவி வகிக்கும் குறித்த அதிகாரி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளராக (ADP) இருந்த காலப் பகுதியில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து குறித்த அரச காணியை அடாத்தாக பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.