ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மூலம் தங்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவைத் தன்னிச்சையாகக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தில் திருத்தம் மேற்கொண்டு, தங்களுக்கு சாதகமான தீர்வை வழங்கியமைக்கு ஜனாதிபதிக்குப் பாராட்டுக்களைத் தெரிவிப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமல் விஜேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான பாதீட்டு முன்மொழிவுகளில் வைத்தியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவைக் குறைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்மானத்திற்கு எதிராகக் கடந்த வாரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்குத் திட்டமிட்டிருந்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சருடனான சந்திப்பையடுத்து, அந்த தீர்மானத்தை ஒத்திவைத்தது.
அதற்கமைய, பாதீடு தொடர்பான இறுதி வாக்கெடுப்பு இடம்பெற்ற நேற்றைய தினம் வரை பணிப்புறக்கணிப்பு தீர்மானத்தை ஒத்திவைப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னதாக நடவடிக்கை எடுத்திருந்தது.
இதனிடையே, வைத்தியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்.
இந்தநிலையிலேயே, தங்களது கோரிக்கையை அவ்வாறே செயற்படுத்துவதாக ஜனாதிபதியும் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாகவும், அதற்காக அவருக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பாராட்டுக்களைத் தெரிவிப்பதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமல் விஜேசிங்க அறிவித்துள்ளார்.