தூதரகங்கள் மூலம் வருமானம் ஈட்டிய அரசாங்கம்!
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மூலம் கடந்த வருடம் 3,221 மில்லியன் ரூபா வருமானத்தை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு திரட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் கொரோனா தொற்றுநோய் ஆரம்பித்ததில் இருந்து செலவீனங்களைக் குறைப்பதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த நடவடிக்கைகளுக்கமைய, வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் ஊழியர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டதுடன் சிலரின் கொடுப்பனவுகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டது.
இதன் காரணமாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு 2021ஆம் ஆண்டிற்கான அதன் வருடாந்த வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளில் இருந்து 1,314 மில்லியன் ரூபாவை மீதப்பபடுத்தியுள்ளது. அத்துடன், வெளிநாட்டுத் தூதரகங்களில் பணிபுரியும் 40 உத்தியோகத்தர்களை மீள் நியமனமின்றி இலங்கைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாது தெரிவு செய்யப்பட்ட தூதரகங்களை தற்காலிகமாக மூடுவதற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், 2022 ஏப்ரல் 26ஆம் திகதி நிதி அமைச்சின் தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை இல. 3/2022 மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, மேலதிக செலவுகளைக் குறைக்குமாறு வெளிநாடுகளில் உள்ள அனைத்து தூதரகத் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிரிவுத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை 2022ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் பராமரிப்பு மற்றும் சம்பளத்திற்காக 10.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் 2021ஆம் ஆண்டில் 3,221 மில்லியன் ரூபாய் வருமானத்தையும், தூதரக சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு 675 மில்லியன் ரூபாய் வருமானத்தையும் ஈட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.