எந்தவொரு விசாரணைகளிலும் அரசாங்கம் தலையிடாது
எந்தவொரு விசாரணைகளிலும் அரசாங்கம் தலையிடாது எனவும், விசாரணைகளை மேற்கொள்பவர்களை பலப்படுத்துவதற்கு மாத்திரமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (25)ஹோமாகம – பிட்டிபன பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
9 வருடங்களாக மறைக்கப்பட்டிருந்த கோப்புகள்
இதன்போது கடந்த 9 வருடங்களாக மறைக்கப்பட்டிருந்த கோப்புகள் தற்போது திறக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அரசாங்கம் எந்தவொரு நபர்களையோ, வழக்குகளையோ தெரிவு செய்வதில்லை எனவும் ஜனாதிபதி கூறினார்.
அத்துடன் உரிய வகையில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாத்திரமே சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவதாகவும், ஒருபோதும் அரசாங்கம் விசாரணைகளில் தலையிடாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் இன்னும் ஓரிரு வாரங்களில் உள்நாட்டு சந்தையில், நிர்ணய விலைக்கு புறம்பாக சந்தையில் அரிசியை விற்பனை செய்யும் செயற்பாடு முற்றாக ஒழிக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறினார்.
தற்போது உடனடியாக இதனை செய்வதற்கு முயன்றால் பாரிய நெருக்கடி ஏற்பட்டுவிடும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.