கோட்டாபயவின் இன்றைய உரையால் மின்வெட்டு நேரத்தில் திடீர் மாற்றம்
இலங்கை எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டு மக்கள் மத்தியில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
அதன்படி இன்றிரவு 8:30 மணிக்கு ஜனாதிபதி நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இதன்போது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார சிக்கல்கள் மற்றும் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு குறித்து ஜனாதிபதி தனது உரையில் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஜனாதிபதியின் விசேட உரை, அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் ஒளிபரப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்வெட்டு நேரத்தில் மாற்றம்
இன்றைய தினமும் நாட்டில் சுழற்சி முறையில் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, A B C D E F G H I J K L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணி நேரம் தடைப்படும்.
அத்தோடு மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதிக்குள், 2 மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. P Q R S T U V W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், காலை 8.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதிக்குள் 3 மணி நேரம் மின்வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மாலை 5.30 முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதிக்குள் இரண்டரை மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூறியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 08.30 க்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ள நிலையில் இரவு 8 மணி முதல் 09.30 மணி வரை நாட்டின் எந்தப் பகுதிக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது.
இரவு 8 மணிக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் மின்சாரம் இருக்கும் என்றும் இரவு 9.30 மணிக்கு பின்னர் சில பகுதிகளில் தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.