சுமந்திரனுக்கு ஜனாதிபதி கோட்டாபய அனுப்பிய குறுஞ்செய்தி!
ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு நேற்று முன்தினம் (22-03-2022) இடம்பெற்ற வேளையில் மாநாட்டில் பங்கேற்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் (M.A.Sumanthiran) கருத்துக்களையும் முன்வைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) குறுஞ்செய்தி மூலமாக அறிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு காணும் விதமாக ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு புதன்கிழமை (24-03-2022) கூடியிருந்தது.
இதன்போது மாநாட்டில் கலந்துகொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe), ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena), தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் (R.Sampanthan) ஆகியோர் தமது நிலைப்பாடுகளை முன்வைத்திருந்த நிலையில், மூன்று தசாப்த யுத்தம் நாட்டில் பிரதான பிரச்சினையாக காணப்பட்டது.
யுத்தத்தை தோற்றுவித்த காரணிகள் இன்னும் நாட்டில் உள்ளது. அதிகார பகிர்வு மூலமாகவே இதற்கான தீர்வுகளை காண முடியும். எனவே அதிகார பகிர்வு மூலமாக நெருக்கடிகளுக்கு தீர்வு காண வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுமந்திரனுக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பி சுமந்திரன் எம்.பியின் கருத்துக்கள் சிலவற்றையும் முன்வைக்குமாறு தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் சர்வகட்சி மாநாட்டில் கருத்துக்களை முன்வைத்திருந்த சுமந்திரன், தான் இதற்கு முன்னரும் சகல கட்சிகளின் தலைவர்களை ஒன்றிணைத்து நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கான தீர்வு என்ன என்பது குறித்து அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தோம்.
இரண்டு தடவைகள் இவ்வாறு சகல கட்சிகளின் தலைவர்களையும் ஒன்றிணைந்து கலந்துரையாடி இப்போது நீங்கள் எதிர்பார்க்கும் தீர்வுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தோம். அதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற விடயங்களை தெரிவித்துள்ளார்.
திரு சம்பந்தன் அவர்கள் கூறிய காரணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது குறித்து ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு தனிப்பட்ட ரீதியில் சந்தித்து கலந்துரையாடும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள தேவையான சரியான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும், இலங்கைக்கு உதவ அவர்கள் தயாராக உள்ளனர். ஆனால் அதற்கான முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தாக வேண்டும் எனவும் சுட்டுக்காட்டியுள்ளார்.