மிரிஹானை ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் செயற்பட்டவர்கள் இவர்களா? கெஹெலிய
ஜனாதிபதி கோட்டாபய இல்லத்திற்கு அருகே இடம்பெற்ற சம்பவத்தின் பின்னணியில் அரசியல் அடிப்படைவாதிகள் செயற்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று வெள்ளிகிழமை (01-04-2022) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவினை கோருவதற்காக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே இந்த சம்பவத்தின் பின்னணியில் அரசியல் அடிப்படைவாதிகளே செயற்பட்டுள்ளனர் என்பது தெளிவாகின்றது.
அவ்வாறு அரசியல் அடிப்படைவாதிகள் செயற்பட்டிருப்பின் அதனை முன்னெடுத்தவர்கள் யார் என ஊடகவியலாளர்களினால் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர்,
அதனை இந்த தருணத்தில் வெளிப்படுத்த முடியாது. இந்த விடயம் குறித்த விசாரணைகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.
விசாரணைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கு முன்னர், எவ்வாறு மதம் மற்றும் ஏனைய அடிப்படைவாத செயற்பாட்டால் இந்த விடயம் நிகழ்ந்துள்ளது என்பதை குறிப்பிட முடியும் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, மத அடிப்படை வாதமாக கருத முடியாது. சாதாரணமாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் சிலரின் தூண்டுதலுக்கு மத்தியிலேயே பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது என்பதையே தற்போது தெரிவிக்க முடியும் என குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், மிரிஹானையில் உள்ள ஜனாதிபதியின் பிரத்தியேக இல்லத்துக்கு அருகில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அவ்வாறு கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்ட பெருமளவானோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் அதிகமானோர் அடிப்படைவாதிகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அரபு வசந்தத்தை இந்த நாட்டில் ஏற்படுத்துவோம் என்று அவர்கள் கோசம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தை வழிநடத்தியதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.