விசேட சுற்றிவளைப்பின் சிக்கிய நால்வர் ; 4 கோடி ரூபா மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
துங்கல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிட்டிப்பன மீன் இறக்குமதி துறைமுக (லெல்லம) பகுதிக்கு அருகே, சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பெருந்தொகை மருந்துகளுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு மாவட்ட குற்றவியல் விசாரணைப் பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, லொறி ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த சுமார் 4 கோடியே 83 இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்ட நடவடிக்கை
இம்மருந்துகளுக்கு உரிய அனுமதிப் பத்திரங்கள் மற்றும் எவ்வித தரப் பரிசோதனைகளும் இன்றி, கடல் மார்க்கமாக நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த மருந்துத் தொகுதியை கடல் வழியாகக் கடத்தி வருவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 2 படகுகளுடன் மாலுமிகள் இருவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக துங்கல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 31 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்கள் நீர்கொழும்பு மற்றும் மஸ்கெலியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நேற்று (25) நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், துங்கல்பிட்டிய பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.