அனோஜனின் நிலை தொடர்பில் மகிழ்ச்சி தகவல் ; சிறைக்கு நேரடியாக சென்று சந்தித்த இலங்கை தூதுவர்
மரண தண்டனை விதிக்கப்பட்டு சவூதி அரேபிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் நலன் குறித்து ஆராய்வதற்காக, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாட் சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.
இதன்போது, அனோஜனைச் சந்தித்ததாகவும், அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார். ரியாத்திலிருந்து சுமார் 450 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சிறைச்சாலையிலேயே அனோஜன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சட்ட நடவடிக்கை
இந்தத் தகவலை, சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ள இலங்கையின் விசேட சட்டக் குழுவினருக்கு தூதுவர் தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார்.
அனோஜனை விடுவிப்பது மற்றும் அவருக்கான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, இலங்கையின் விசேட சட்டக் குழுவினர் கடந்த 6ஆம் திகதி சவூதி அரேபியாவுக்குப் பயணித்துள்ளனர்.
சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியிலும், அனோஜனை விடுவிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் இந்தக் குழு தனது பணிகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.