வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைப் பணியாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்
வெளிநாடுகளில் பணிபுரியும் புலம்பெயர் பணியாளர்களுக்கு வீட்டுக் கடன்களை பெற்றுக்கொடுக்கும் புதிய வேலைத்திட்டம் எதிர்வரும் சில நாட்களில் நடைமுறைப்படுத்தப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.
இது குறித்து வங்கித்துறை மற்றும் இலங்கை மத்திய வங்கியுடனான கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் மனுஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நடைபெற்ற சர்வதேச புலம்பெயர்ந்தோர் தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய வேலைத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் ஏனைய மக்களை விட குறைந்த வட்டி வீதத்தில் வீட்டுக் கடனைப் பெற முடியும் என அவர் கூறினார்.
இதேவேளை, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மேற்கொள்ளும் பணப்பரிமாற்றத்துக்கு ஏற்ப வழங்கப்படவுள்ள தீர்வையில்லா (Duty free) கொடுப்பனவு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
உத்தேச தீர்வையில்லா கொடுப்பனவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டு 4 மாதங்கள் கடந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உத்தேச கொடுப்பனவு திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டு 4 மாதங்கள் கடந்துள்ள போதிலும், நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகள் இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை இதுவரை எடுக்கவில்லை எனவும் அவர் கூறினார்.