1979 ஆம் ஆண்டிற்குப் பின் 2025 இல் எகிறிய தங்கம் விலை; 2026 இல் குறையுமா...கூடுமா!
சர்வதேசச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது 1979 ஆம் ஆண்டிற்குப் பின்னர், 2025 ஆம் ஆண்டில் பாரிய வருடாந்த உயர்வைப் பதிவு செய்துள்ளது.
உலக பொருளாதார நிச்சயமற்ற சூழலிலும், இந்த வருடம் முதலீட்டாளர்களுக்குத் தங்கம் மற்றும் வெள்ளி பெரும் இலாபமாக அமைந்தது.
அந்தவகையில் 2025 இல் தங்கத்தின் விலை 60 சதவீதத்திற்குமமேலாக உயர்ந்துள்ளது.

45 ஆண்டுகால சாதனை முறியடிப்பு
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,549 அமெரிக்க டொலர் என்ற முன்னெப்போதும் இல்லாத வரலாற்று உச்சத்தை எட்டியது.
இன்று டிசம்பர் 31 ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 4,350 அமெரிக்க டொலர் என்ற உயர்ந்த விலையிலேயே வர்த்தகமாகிறது.

இதனிடையே, தங்கத்தைப் போலவே வெள்ளியும் இந்த ஆண்டு அதிரடி விலையேற்றத்தைக் கண்டது. கடந்த திங்கட்கிழமை ஒரு அவுன்ஸ் வெள்ளி 83.62 அமெரிக்க டொலர் என்ற புதிய உச்சத்தை எட்டியது.
இந்தநிலையில், இன்று ஒரு அவுன்ஸ் வெள்ளி சுமார் 74 டொலர் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
விலை உயர்வின் பின்னணி ...
தங்கத்தின் விலையில் ஏற்பட்ட இந்த அதிரடி மாற்றத்திற்கு முக்கியக் காரணங்களாகப் பொருளாதார நிபுணர்கள் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றனர்.
அமெரிக்க மத்திய வங்கி 2026 ஆம் ஆண்டிலும் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு முதலீடுகளைத் தங்கம் நோக்கித் திருப்பியுள்ளது.

அத்துடன், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களது கையிருப்பில் நூற்றுக்கணக்கான டன் தங்கத்தைச் சேர்த்துள்ளதாக உலக தங்க பேரவை தெரிவித்துள்ளது.
அதேநேரம், வெள்ளி உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடான சீனா, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பைக் காரணங்காட்டி வெள்ளி ஏற்றுமதிக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தால் வெள்ளியின் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல, மின்சார வாகனங்கள் மற்றும் தொழில்நுட்பத் துறையில் வெள்ளியின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் மதிப்பு கூடியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
சீனாவின் வெள்ளி ஏற்றுமதி கட்டுப்பாடு
சீனாவின் வெள்ளி ஏற்றுமதி கட்டுப்பாடு குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டெஸ்லா நிறுவுனர் ஈலோன் மஸ்க், "இது நல்லதல்ல; பல தொழில்துறை செயல்பாடுகளுக்கு வெள்ளி மிகவும் அவசியமானது" எனக் கவலை தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டில் சந்தை நிலவரம் எப்படி இருக்கும்? எனினும் பிறக்கும் 2026ஆம் ஆண்டிலும் தங்கத்தின் விலை உயர்வு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், 2025 ஆம் ஆண்டில் காணப்பட்ட அதீத வேகத்தை விட 2026 ஆம் ஆண்டில் விலை உயர்வு ஓரளவுக்குச் சீராக இருக்கும் என சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம், வெள்ளி விலையில் திடீர் உயர்வுகளுக்குப் பிறகு சில கடுமையான விலை சரிவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.