புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை; நகை வாங்க காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி
ரஷ்யா-உக்ரைன் போரின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அதன்படி சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 40 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. ரஷ்யா - உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போர் 12ஆவது நாளாக தொடர்ந்து வருவதால் உலக அளவில் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,433 புள்ளிகள் சரிந்து 52,890 ஆக வர்த்தகமாகின. தேசிய பங்குச்சந்தையின் நிலவரப்டி 430 புள்ளிகள் சரிந்து 15,815 ஆகவும் வர்த்தகமாகின.
இந்நிலையில், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 85 ரூபாய் உயர்ந்து, ₹5055-க்கு விற்பனையாகிறது. அதாவது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ₹40440 க்கு விற்பனையாகிறது.
இதனால், திருமணங்களுக்கு தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.