வரலாற்றில் முதல் முறையாக 4,000 அமெரிக்க டொலர்களை கடந்த தங்க விலை
வரலாற்றில் முதல் முறையாக புதன்கிழமை (08) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,000 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) மேலும் வட்டி விகிதக் குறைப்புகளை மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்புகளுடன், அதிகரித்து வரும் பொருளாதார மற்றும் அரசியல் அசாதாரண நிலைமைகளில் இருந்து பாதுகாப்பு தேடும் முதலீட்டாளர்களின் நடவடிக்கைகள் இதற்கு காரணமாக இருந்தன.
0300 GMT நிலவரப்படி தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.7% அதிகரித்து 4,011.18 அமெரிக்க டொலர்களாக இருந்தது. டிசம்பர் அமெரிக்க தங்க எதிர்கால ஒப்பந்தங்கள் 0.7% அதிகரித்து அவுன்ஸ் ஒன்றுக்கு 4,033.40 அமெரிக்க டொலர்களாக இருந்தது.
பாரம்பரியமாக, தங்கம் அசாதாரண மற்றும் நிலையற்ற காலங்களில் மதிப்பை காக்கும் ஒரு சொத்தாகக் கருதப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் 27% அதிகரித்த பின்னர், தங்க விலை இவ் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 53% அதிகரித்துள்ளது.
“தற்போது இந்த வர்த்தகத்தில் மிகப் பெரிய நம்பிக்கை நிலவுகிறது, குறிப்பாக மத்திய வங்கி (Fed) தொடர்ந்து வட்டி விகிதங்களை குறைக்கும் வாய்ப்பு உள்ளதால், சந்தை அடுத்த பெரிய இலக்கான 5,000 அமெரிக்க டொலர்களை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது,” என சுயாதீன உலோக வர்த்தகர் டை வொங் (Tai Wong) தெரிவித்துள்ளார்.
“மத்திய கிழக்கு அல்லது உக்ரைனில் நீடித்த அமைதி ஒப்பந்தம் போன்ற சில இடையூறுகள் இருக்கலாம், ஆனால் இந்த வர்த்தகத்தின் அடிப்படை காரணிகள்,பெரும் மற்றும் வளர்ந்து வரும் கடன், கையிருப்பு (reserve) பன்முகப்படுத்தல், மற்றும் பலவீனமான டொலர் — நடுத்தர காலத்தில் மாறுவது சாத்தியமில்லை,” என அவர் தெரிவித்துள்ளார்.
தங்கத்தின் விலை உயர்வை பல காரணிகள் ஒன்றிணைந்து தூண்டியுள்ளன. இதில் வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்புகள், அரசியல் மற்றும் பொருளாதார அசாதாரண நிலை, மத்திய வங்கிகளின் வலுவான தங்கக் கொள்முதல், தங்க ETF களில் முதலீட்டு வரவு, மற்றும் பலவீனமான அமெரிக்க டொலர் ஆகியவை அடங்கும்.