வீடுகளை உடைத்து கைவரிசை ; புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பொருட்களால் ஷாக்
நாவலப்பிட்டி - ரம்புக்பிட்டிய, கெந்தோப்பிட்டிய மற்றும் வெலிகம்பொல உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நாவலப்பிட்டி, கெந்தோப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

அதிரடி சோதனை
சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், போதைப்பொருள் விற்பனை மற்றும் வீடு உடைப்பு உள்ளிட்ட குற்றங்களுக்காக ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கடந்த ஜனவரி 22ஆம் திகதி பிணையில் விடுதலையாகி வந்த பின்னர், சுமார் 08 வீடுகளை உடைத்து 35 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள், சுமார் 40,000 ரூபா பணம் மற்றும் 04 கையடக்க தொலைபேசிகளை கொள்ளையடித்துள்ளமை தெரியவந்துள்ளது.
நாவலப்பிட்டி பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட அதிரடி சோதனையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் அவரது வீட்டிற்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொள்ளையடித்த பணத்தை தான் போதைப்பொருள் வாங்குவதற்கே பயன்படுத்தியதாகவும், ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்திய பின்னரே தனக்கு வீடுகளை உடைத்து திருடும் எண்ணம் ஏற்படுவதாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆசிரியர்கள், வங்கி அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் போன்ற பகல் வேளையில் கடமைகளுக்காக வீட்டை விட்டு வெளியேறும் நபர்களின் வீடுகளைக் இலக்கு வைத்து இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.