தாயாரின் ஆண் நண்பரால் சிறுமிக்கு சித்திரவதை ; தமிழர் பகுதியில் சம்பவம்
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் 5 வயது சிறுமி ஒருவரின் தாயாரின் ஆண் நண்பர் சிறுமிக்கு உடல் முழுக்க சூடு வைத்து அடித்து சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் சிறுமி படுகாயமடைந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (19) வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதுடன் சித்திரவதை செய்த சந்தேகநபர் தலைமறைவாகி யுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறுமியின் உடல் முழுக்க காயங்கள்
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த திருமணம் முடித்து 5 வயது குழந்தை ஒன்றுக்குத் தாயான 23 வயதுப் பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், சிறுமியின் தாயார் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பகுதியைச் சேர்ந்த திருமணம் முடித்த ஆண் ஒருவருடன் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் குறித்த பெண்ணுக்கு கொழும்பில் வேலை பெற்றுத்தருவதாகத் தெரிவித்து குறித்த பெண்ணுடன் அவரது 5 வயது குழந்தையையும் கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கொழும்பில் தங்கியிருந்த விடுதியில் வைத்து அந்த நபர் , சிறுமிக்கு சூடு வைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளதையடுத்து சிறுமியின் வாய் மற்றும் கை ,கால், முதுகு உட்பட உடல் முழுக்க காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனையடுத்து சிறுமியுடன் தாயார் கொழும்பில் இருந்து மீண்டும் வீட்டுக்கு வந்த பின்னர் நேற்றுமுன்தினம் (19) சிறுமியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் கொழும்பில் வைத்து தனக்கு அடித்துள்ளதாக சிறுமி தெரிவித்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, சிறுமிக்கு சூடு வைத்து அடித்த நபர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவித்த கொக்கட்டிச்சோலை பொலிஸார் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.