சர்ச்சைக்குரிய கிரிஷ் கட்டிட தீ பரவலுக்கான காரணம் வௌியானது
கொழும்பின் மிக உயரமான கட்டிடமாகக் கருதப்படும் 'கிரிஷ்' கட்டிடத்தில் ஏற்பட்ட இரண்டு தீ விபத்துகள் குறித்து தீயணைப்புத் திணைக்களம் தற்போது முதற்கட்ட விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
'கிரிஷ்' கட்டிடம் தீப்பிடிக்கக் காரணமான சில காரணிகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தீக்கான காரணம்
கட்டிடத்தின் இரும்பு பாகங்களை பாதுகாப்பற்ற முறையில் எரிவாயு கட்டர் (gas cutter) மூலம் வெட்டியதே தீ விபத்துக்கான முக்கிய காரணம் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மீண்டும் இரும்பை வெட்டி அகற்ற எரிவாயு கட்டர்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று தீயணைப்புத் திணைக்களம் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.இது தொடர்பாக இரசாயன பகுப்பாய்வாளரின் அறிக்கையும் கோரப்பட்டுள்ளது.
'கிரிஷ்' கட்டிடத்தின் 35வது மாடியில் நேற்று முன்தினம் (6) தீ விபத்து ஏற்பட்டதுடன், பின்னர் நேற்று (7) 24வது மாடியிலும் தீ விபத்து ஏற்பட்டது.
இதன் விளைவாக, தீயை அணைக்க தீயணைப்புத் திணைக்களம் இரண்டு சந்தர்ப்பங்களிலும் தலா 3 தீயணைப்பு வாகனங்கள் என 6 தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்த வேண்டி ஏற்பட்டது.
இதற்கிடையில், 'கிரிஷ்' கட்டிடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதற்காக 20 பொலிஸ் அதிகாரிகள் கொண்ட குழு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.