ஜெனிவா பிரேரணை நல்லிணக்கத்துக்கு சாபக்கேடு; சீறும் விமல்
இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமானால் சர்வதேச நாடுகள் உதவிகளைச் செய்யவேண்டும் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, இவ்வாறான நெருக்கடி நேரத்தில் இலங்கைக்கு எதிராக ஏன் மற்றுமொரு பிரேரணையை முன்வைக்கவேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் பிரேரணைகள் மூலம் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதைச் சர்வதேச நாடுகள் கவனத்தில்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான பிரேரணைகள் இன உறவுக்கு மேலும் குந்தகத்தையே ஏற்படுத்தும் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
எந்த பிரேரணையும் செயலுருப்பெற்றதில்லை
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழ வேண்டுமெனில் சர்வதேச நாடுகளின் உதவிகளே வேண்டும் எனவும் விமல் குறிப்பிட்டார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட எந்தப் பிரேரணையும் செயலுருப்பெற்றதாக வரலாறு இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.